கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திறந்துவைத்து, 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திறந்துவைத்து, 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல்-அமைச்சர் வருகை
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டுப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து ஆம்பூர் அருகே உள்ள மொஹிப் ஷூ கம்பெனியில் உள்ள விடுதியில் இரவு தங்குகிறார்.
கலெக்டர் அலுவலகம் திறப்பு
கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவதறகாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆம்பூரில் இருந்து புறப்பட்டு வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காலை 9.15 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகிறார். அங்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்.
பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை பார்வையிட்டடு. மரக்கன்று நட்டு வைக்கிறார்.
10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு துறைகளின் சார்பில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க ஆம்பூர் முதல் திருப்பத்தூர் வரை கட்சி கொடிகள் கட்டப்பட்டு, ஆங்காங்கே வரவேற்பு மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.