முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 25 Jun 2023 10:43 PM IST (Updated: 26 Jun 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனியே 5 பிரிவுகளாக நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றிப்பெற்று முதல் 3 இடங்களை பிடித்த 2079 வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாநில அளவிலான போட்டிக்கு...

ராணிப்பேட்டையில் மாவட்ட அளவில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 8,294 பள்ளி மாணவ-மாணவிகள், 2,464 கல்லூரி மாணவ மாணவிகள், 1315 பொதுமக்கள், 57 மாற்றத்திறனாளிகள் ஆக மொத்தம் 12,943 நபர்கள் பங்கேற்றனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த 2079 நபர்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் வருகிற 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் 650 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக மாவட்ட அளவில் ரூ.13.85 கோடியும், மாநில அளவில் ரூ.11.63 கோடியும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 83,892 வீரர் வீராங்கனைகள் மாவட்ட அளவிலும், 2214 வீரர்கள்வீராங்கனைகள் மாநில அளவிலும் பயனடைய உள்ளார்கள்.

விளையாட்டு அரங்கம்

இப்போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெறலாம் மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடியில் ஒரு மினி விளையாட்டு அரங்கம் சுமார் 5.5 ஏக்கர் முதல் 7.5 ஏக்கர் நிலத்தில் 200, 400 தடகளப் பாதை, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோகோ, கபடி மற்றும் அலுவலக அறை, உபகரண இருப்பு அறை போன்றவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், முஹமது ஹமீன், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


Next Story