திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் 4-ந்தேதி முதல் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் 4-ந்தேதி முதல் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான முறையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படடு அதனை கடந்த 29-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் புதிய கலெக்டர் அலுவலகம் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் 4-ந்தேதி முதல் (திங்கட்கிழமை) முதல் திருப்பத்தூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைத்தீர்வுக் கூட்ட அரங்கில் நடத்தப்படும்.
இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள். மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகை சீட்டும் வழங்கப்படும்.
இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் மனுதாரர்கள் மனுவில் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார்எண்களை பதிவு செய்து தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.