புகைப்பட போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம்; கலெக்டர் தகவல்


புகைப்பட போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் புத்தக திருவிழாவையொட்டி நடைபெற உள்ள புகைப்பட போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது. திருவிழாவின் கடைசி 4 நாட்கள் நெய்தல் திருவிழா மற்றும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டியும் நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச் சின்னங்கள், தாமிரபரணி ஆற்றின் இயற்கை எழில்கள், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், சமூகத்தின் பிரதிபலிப்புகள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், மக்களின் தினசரி வேலைசார்ந்த நிகழ்வுகள், தொழில் சார்ந்த படைப்புகள், தனிநபர்களின் வித்தியாசமான அணுகுமுறைகள், சுற்றுப்புறச்சூழலை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் என அனைத்து வகையான புகைப்படங்களையும் அனுப்பலாம்.

போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களது புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கலாம். 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்துக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். ஒரு நபர் அதிகபட்சமாக 5 புகைப்படக்களை தேர்வுக்காக அனுப்பலாம்.

எனவே புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது புகைப்படங்களை ஏப்ரல் 16-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்களை இன்னும் 2 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://thoothukudi.nic.in-ல் வெளியிடப்படும் இணைப்பில் (லிங்) பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story