முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்ததால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 135.40 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 6,700 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,867 கனஅடியாகவும் உள்ளது.
இதற்கிடையே மத்திய நீர் வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர் முறை படி இந்த மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 136.6 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கிக்கொள்ள அனுமதி உள்ளது. இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 135.40 அடியை எட்டியதால் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட கேரள பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






