மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்தது; கலெக்டர் பார்வையிட்டார்

தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் காகித தணிக்கை எந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நேற்று முடிவடைந்தது. இதனை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் காகித தணிக்கை எந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் நேற்று முடிவடைந்தது. இதனை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சரிபார்க்கும் முதல்கட்ட பணி கடந்த 4-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
இதையடுத்து சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிப்பதற்காக நேற்று முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இந்த முதல் மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
இதற்காக 5 சதவித எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் ஒரு சதவீத எந்திரங்களில் ஆயிரத்து 200 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் ஆயிரம் வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெங்களூருவுக்கு....
இந்த பணிகள் முடிவடைந்த பின்பு முதல் நிலை சரிப்பார்ப்பு பணியில் சரிவர செயல்படும் எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் சீல் வைக்கப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், "முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த 7 நாட்களுக்குள் முதல்நிலை சரிபார்ப்பு எந்திரங்களில் பழுதடைந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது" என்றார்.
இந்த ஆய்வின்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) காமாட்சி கணேசன், தேர்தல் தாசில்தார் தில்லைப்பாண்டி, தனி தாசில்தார் (சிப்காட்) சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






