கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாகபெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கூடலூர் அரசு ஆஸ்பத்திரி
தமிழக- கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் தாலுகா அமைந்துள்ளது. சுமார் 1½ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக மேல் கூடலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக போதிய டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.
இதனால் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள் கேரளா அல்லது ஊட்டிக்கு செல்ல வேண்டிய நிலை தொடர் கதையாக இருந்து வந்தது.
அறுவை சிகிச்சை
இருப்பினும் பணியில் உள்ள சில டாக்டர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.. இந்த நிலையில் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜோ குட்டி (வயது 60). இவர் அதே பகுதியில் எஸ்டேட் வேலைக்குச் சென்று வருகிறார். இந்த நிலையில் நீண்ட காலமாக இடது மூட்டு கால் வலியால் நடக்க முடியாமல் அவதியடைந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது கால்களை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது பிஜோ குட்டியின் கால் மூட்டு எலும்பில் தேய்மானம் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் டாக்டர்கள் கவின், பராசரன் ஆகியோர் பிஜோ குட்டியின் இடது காலில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
முதன் முறையாக சாதனை
இதுகுறித்து கூடலூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் சுரேஷ் கூறியதாவது:- கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிக்கு இடது காலில் நடக்க முடியாத வகையில் வலி இருந்து வந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.