கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர்
கோவை காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி இளம்பெண் அசத்தி வருகிறார். கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனரான அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கருமத்தம்பட்டி
கோவை காந்திபுரம்-சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி இளம்பெண் அசத்தி வருகிறார். கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனரான அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பஸ் ஓட்டுனரான இளம்பெண்
நவீன இந்த உலகத்தில் தற்போது பெண் என்பவள் ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வளர்ச்சி அடைந்து வருகிறாள். அடுப்படியில் கிடந்த நிலை மாறி...
எல்லாம் அவளுக்கும் அத்துபடி என்ற நிலை உருவாகி விட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து வருகின்றனர்.
ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.
தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.
இப்படி தான் கோவையில் ஒரு 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் ஓட்டுனர் பணியால் ஈர்க்கப்பட்டு, இன்று கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனராக திகழ்ந்து வருகிறார். அவருக்கு பாராட்டு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தந்தையின் பணி
கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி வரும் வடவள்ளியை சேர்ந்த சர்மிளா (வயது 24) தனது பணி குறித்து கூறியதாவது:-
எனது தந்தை மகேஷ் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.
எனது தாய் ஹேமா. சிறு வயதில் இருந்தே எனது தந்தை தான் எனக்கு ரோல் மாடல். அதனால் அவரது பணி எனக்கு மிகவும் பிடிக்கும்.
சிறு வயதில் எனது தந்தையின் ஆட்டோவில் ஏறி அமர்ந்து ஆட்டோவை ஓட்டுவதுபோல விளையாடுவேன்.
இதனால் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இதையடுத்து எனது தந்தையின் ஆட்டோவை ஓட்டினேன். இதற்கு எனது தந்தையும் உறுதுணையாக இருந்தார்.
மகிழ்ச்சி
பின்னர் படிப்படியாக கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்.
இதையடுத்து சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றினேன். அப்போது பெரிய கனரக வாகனங்களையும் இயக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது.
எனது இந்த ஆசைக்கு தந்தையும் துைணயாக நின்றார். இதனால் கனரக வாகனங்களை இயக்க பயிற்சி பெற்றேன். தொடர்ந்து வேலைக்காக காத்திருந்தேன்.
அப்போது தான் மகளிர் தினத்தன்று நான் வேலைக்காக காத்திருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனை பார்த்து எனக்கு சோமனூர்-காந்திபுரம் வழித்தடத்தில் தனியார் பஸ் டிரைவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்த பணியை சிறப்பாகவும், உற்சாகமாகவும் செய்து வருகிறேன்.
எனக்கு மற்ற பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் என அனைத்து தரப்பினரும் உற்சாகப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.