முதலாவது உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாடு நடத்தப்படும் என்று துணைவேந்தர் திருவள்ளுவன் கூறினார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாடு நடத்தப்படும் என்று துணைவேந்தர் திருவள்ளுவன் கூறினார்.
பயிலரங்கம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறையும், தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த ஒருநாள் பயிலரங்கை நடத்தியது. இந்த பயிலரங்கை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
விக்கிப்பீடியா என்னும் இணையப்பக்கத்தில் பொதிந்துள்ள தமிழ்க் கருத்துக்கருவூலங்களை இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழும் தமிழரும் வாசித்தறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய வசதிகள் இல்லாத நாட்களில், ஒரு சிறு தகவலுக்காகக் கூட நூலகங்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு உள்ளங்கையில் தகவல்கள் வந்து அமரும் சூழலை விக்கிப்பீடியா தமிழ்ப்பக்கம் உருவாக்கியுள்ளது.
நாம் இத்தனை முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், விக்கிப்பீடியாவின் ஆங்கிலப்பக்கத்துக்கு இணையாக, தமிழையும் கொண்டுச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. அதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்களைக் கொண்டு. தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களை மையப்படுத்தி, சர்வதேசத் தரத்தில் 100 கட்டுரைகள் வருகிற டிசம்பர் மாதம் உள்ளீடு செய்யப்படும். மேலும் விக்கிப்பீடிய தமிழ்த்தளத்தை வலிமையுடன் கட்டமைக்கும் வகையில், முதலாவது உலகத் தமிழ் விக்கிப்பீடியா மாநாடு தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதா கஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இந்து வரவேற்றார். வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகித்தார். தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகப் பொறுப்பாளர் மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவரும் பதிவாளருமான.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
100 பேர் பங்கேற்பு
இதில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் கர்நாடக மாநில மைசூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்திருந்த 80 கல்வியாளர்கள் மற்றும் 20 மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், புதிய தலைப்புகளில் வெளிவராத தரவுகளைச் சேர்த்தல் ஆகியவை குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் செய்திருந்தார். விக்கிப்பீடியா சார்பில் பயிலரங்கினை மாரியப்பன் ஒருங்கிணைத்தார். முடிவில் விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.