திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்து கலந்து கொண்டனர்.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்து கலந்து கொண்டனர்.
வகுப்புகள் தொடக்கம்
பிளஸ்-2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின.
இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து பெற்றோருடன் மாணவ-மாணவிகள் நேற்று காலை திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆர்வத்துடன் வந்தனர். அவர்களை பேராசிரியர்கள் வரவேற்றனர்.
அறிவுரை
தொடர்ந்து நடந்த தொடக்க விழாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு தலைமை தாங்கினார். துணை முதல்வர் அர்ஷியா முன்னிலை வகித்தார்.
விழாவில் முதல்வர் நேரு பேசும்போது, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி பாரம்பரியமிக்கது. இங்கு தரமான உணவகம், விடுதி, குடிநீர் போன்ற வசதிகளும், மருத்துவ பயிற்சி அளிக்க அனுபவம் மிக்க, திறமையான டாக்டர்களும் உள்ளனர். முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும். சிறந்த மருத்துவ வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும் என்றார்.
அத்துடன் மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், ஆன்டி-ராக்கிங் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.