முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்


முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்
x

கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு வந்தனர். புதிய மாணவ-மாணவிகளை, முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் 164 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளும்,, தனியார் சுயநிதி கல்லூரிகளும் இருக்கின்றன. வழக்கம்போல பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர். குறிப்பாக பி.காம். பாடப்பிரிவுகளுக்கு போட்டோ போட்டியே நடந்தது.

இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் முறையாக பெறப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு 84,899 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பி.சி. இனத்தவர்களுக்கும் இன்று நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5-ந் தேதியும், எஸ்.சி. பிரிவினருக்கு 6-ந் தேதியும், 7-ந் தேதி தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நேரடி கலந்தாய்வும் கல்லூரிகளில் நடைபெறுகிறது.

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு

இந்தநிலையில் கலை-அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்டமிட்டபடி நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளி படிப்பை முடித்துவிட்டு முதன் முதலாக கல்லூரி வளாகத்துக்குள் கால்பதிக்கின்ற அளவில் அவர்கள் தங்கள் உயர் கல்வி பயணத்தை தொடங்கினர்.

புதிதாக வந்த மாணவ-மாணவிகளை கல்லூரியின் மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் ஆகியோர் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் வரவேற்றனர்.

பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த மாணவ-மாணவிகள் இனம் புரியாத மகிழ்ச்சியுடன் வகுப்புகளை தொடங்கினார்கள். அதேவேளை எந்த கல்லூரிகளிலும் ராக்கிங் பிரச்சினை ஏற்படாத வகையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. சமீபகாலமாக ராக்கிங் பிரச்சினை எங்கும் எழாத நிலை தான் நீடித்து வருகிறது.

பயிற்சி வகுப்புகள்

முதல் நாளான நேற்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வந்தனர். பலர் தங்களது பெற்றோருடன் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று காலையும், மாலையும் மாணவர்களின் நடமாட்டம் அதிகளவில் சாலையில் காணப்பட்டது.

இந்த ஆண்டு பல்வேறு கல்லூரிகளில் ஆங்கிலம் பேசும்-எழுதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. மனஅழுத்தம் இல்லாமல் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் வகுப்புகள், வேலைவாய்ப்புக்கான ஆலோசனை வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story