அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.
முதலாமாண்டு வகுப்பு
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர்.
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளை அந்தந்த துறை பேராசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடங்கியதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில மாணவ, மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து கல்லூரியில் விட்டு சென்றதை பார்க்க முடிந்தது. மாணவ-மாணவிகளை வாழ்த்தி அவர்கள் அனுப்பி வைத்தனர்.
அறிவுரைகள்
கல்லூரியில் முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கல்லூரியில் வகுப்பிற்கான நேரம் மற்றும் பாடங்கள் பற்றியும், ஒழுக்கத்தை கடைப்பிடித்தல், நேரம் தவறாமல் கல்லூரிக்கு வருதல், கல்லூரியின் விதிமுறைகள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட கூடாது என்பது உள்பட அறிவுரைகளை பேராசிரியர்கள் வழங்கினர். மாணவ-மாணவிகளும் அறிவுரைகளை கேட்டுக்கொண்டனர்.
ஒருவருக்கொருவர் அன்பை பகிா்ந்து அறிமுகமாகி கொண்டனர். பேராசிரியர்களும் மாணவ-மாணவிகளை வாழ்த்தி நல்ல முறையில் கல்வி கற்க அறிவுறுத்தினர். கல்லூரியில் முதல் நாள் முடிந்ததும் அவர்கள் முக மகிழ்ச்சியோடு சென்றனர்.