ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள்


ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள்
x

ஏரிகளில் மீன்களை பிடித்து விற்பதற்காக பாசனத்துக்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மீன்பிடி குத்தகைதாரர்கள் மதகுகளை உடைத்து வெளியேற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

ஏரிகளில் மீன்களை பிடித்து விற்பதற்காக பாசனத்துக்கு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மீன்பிடி குத்தகைதாரர்கள் மதகுகளை உடைத்து வெளியேற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தண்ணீர் நிரம்பிய ஏரிகள்

தண்டராம்பட்டு, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளது. இதில் வாணாபுரம் மழுவம்பட்டு, குங்கிலியநத்தம், தென்கரும்பலூர், கொட்டையூர், சதாகுப்பம், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, பழையனூர், நவம்பட்டு உள்ளிட்ட ஏரிகள் கடந்த பிப்ரவரி மாதம் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் நிரம்பின.

இந்த ஏரி தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படும் என்றாலும் மீன்வளத்தை பெருக்கவும் மீன்வளர்க்கவும் குத்தகை ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். ஏரிகள் நிரம்பியதால் கரை வழியாக மீன்கள் வெளியேறாமல் தடுக்க வலைகளை அவர்கள் கட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சாத்தனூர் அணை தண்ணீரால் ஏரிகள் நிரம்பியதால் கோடைகாலம் முழுவதும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

மதகை உடைத்து...

மேலும் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீன்கள் பெரிதாகி விட்டதால் அதனை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏரியிலிருந்து தண்ணீரை மதகு வழியாகவும், அவ்வாறு தண்ணீர் வெளியேறாத மதகுகளை உடைத்தும் தண்ணீரை மீன்பிடி குத்தகைதாரர்கள் வெளியேற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தடுப்பு சுவர்களை உடைத்தும் சில ஏரிகளில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''ஏரியில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி தான் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு பராமரித்து வருகிறோம். ஆனால் ஏரியை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஏலம் எடுப்பவர்கள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் மூலம் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படுவது மட்டுமல்லாமல் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

6 மாதம் பயன்படக்கூடிய தண்ணீரை மீன்பிடி குத்தகைதாரர்கள் ஓரிரு மாதங்களுக்குள் முழுமையாக வெளியேற்றி விடுகின்றனர். இதனால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்'' என்றனர்.


Next Story