திண்டுக்கல் அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் அருகே, நல்லாம்பட்டியில் நடந்த மீன்பிடி திருவிழா களைக்கட்டியது.
திண்டுக்கல் அருகே, நல்லாம்பட்டியில் நடந்த மீன்பிடி திருவிழா களைக்கட்டியது.
முனியப்பன் கோவில்
திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியில் அச்சராஜாகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் வடக்கு முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறும். இதையொட்டி அச்சராஜாகுளத்தில் மீன்பிடி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் வடக்கு முனியப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடந்தது. அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அச்சராஜாகுளத்தில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. முதலில் குளக்கரையில் உள்ள கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதன்பிறகு ஊர் நாட்டாண்மை, கொடி அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
களை கட்டிய மீன்பிடி திருவிழா
அப்ேபாது கரையில் ஏற்கனவே தயாராக இருந்த கிராம மக்கள் வலை, கூடை, ஊத்தா, கச்சா உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களுடன் குளத்தில் இறங்கினர். மீன்பிடி திருவிழா களை கட்டியது. போட்டிப்போட்டு கிராம மக்கள் மீன்களை பிடித்தனர்.
அப்போது சிலருக்கு பெரிய அளவிலான மீன்கள் சிக்கின. அவை 5 கிலோ முதல் 15 கிலோ வரை இருந்தது. இதில், ரோகு, கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மீன்பிடி திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் வீடுகளில் மீன்குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதேபோல் அக்கம்பக்கத்தினர், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால் கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.