கன்னியாகுமரியில் மீன்களின் விலை உயர்வு


கன்னியாகுமரியில் மீன்களின் விலை உயர்வு
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் கன்னியாகுமரியில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் கன்னியாகுமரியில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடல் பகுதியில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இதனால் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க நேற்று முதல் தடை அமலுக்கு வந்தது.

சின்னமுட்டம் துறைமுகம்

அந்த வகையில், கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்குதளத்தில் நேற்று அதிகாலை முதலே குவிந்த ஏராளமான வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர்.

விலை உயர்வு

ஆனால் மீன் வரத்து குறைவாக இருந்ததால் நேற்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.700-ஆக இருந்த வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1000-க்கும், ரூ.250-க்கு விலை போன பாறை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250-க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இன்னும் வரும் காலங்களில் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story