வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது

கோயம்புத்தூர்

உக்கடம்

கோவை உக்கடம் லாரி பேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. தூத்துக்குடி, ராமேசுவரம், நாகை, கடலூர் மற்றும் கேரளாவில் இருந்து இங்கு விற்பனைக்காக மீன்கள், நண்டு உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன. மேலும் இங்கிருந்து திருப்பூர், ஈரோட்டிற்கும் மீன்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கோவை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் இந்த மீன் மார்க்கெட்டிற்கு வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இங்கு மத்தி மீன் முதல் விலை உயர்ந்த வஞ்சிரம் மீன் வரை அனைத்து வகையான மீன்களும் கிடைக்கின்றன. மேலும் நண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்து விடுவார்கள். இந்த நிலையில் கேரளா, தூத்துக்குடியில் இருந்து மீன் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மீன் விலை குறைந்து உள்ளது.

இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்கள் வாங்க வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வருகிறது. அதே நேரத்தில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் அனைத்து வகையான மீன்களின் விலையும் சற்று குறைந்து உள்ளது. கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விலை போன மத்தி மீன்கள் தற்போது கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்பனையானது.

1 கிலோ நண்டு ரூ.150 முதல் ரூ.450 வரையும், வஞ்சிரம் கிலோ ரூ.400 முதல் ரூ.550 வரையும், அயிலை மீன் ரூ.60 முதல் ரூ.80 வரையும் விற்பனையானது. ஜிலேபி கெண்ட மீன் ரூ.50, கிழங்கா மீன் ரூ.130, பாறை மீன் ரூ.250, நெத்திலி மீன் ரூ.300, இறால் ரூ.500 முதல் 750 வரையும் விற்பனையானது. குறைந்த விலையில் கிடைத்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன் வாங்கி சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story