கோவையில் மீன் விலை குறைந்தது


கோவையில் மீன் விலை குறைந்தது
x
தினத்தந்தி 20 Aug 2023 7:00 PM GMT (Updated: 20 Aug 2023 7:00 PM GMT)

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் மீன் விலை குறைந்தது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்

உக்கடம்


வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் மீன் விலை குறைந்தது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கு விற்பனையானது.

மீன் வரத்து

கோவை உக்கடம் லாரிபேட்டையில் மீன் மார்க்கெட் உள்ளது. இதுதவிர உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையிலும் மீன் மார்க்கெட் உள்ளது. இதில் லாரிபேட்டை மீன்மாா்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேசுவரம், நாகை, கன்னியாகுமரி உள்பட கடலோர பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர ஆழியாறு, திரு மூர்த்தி அணை மற்றும் குளத்து மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

ஆடி மாதத்தையொட்டி கடந்த வாரம் வரை மீன் நுகா்வு குறைவாக இருந்தது. அப்போது கேரளாவில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்ததால் மீன் வரத்தும் குறைந்தது. இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் விலை அதிகமாக இருந்தது.

வஞ்சிரம் ரூ.700

தற்போது கேரளாவில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து விட்டதால் கோவை மார்க்கெட்டுக்கு மீன் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன் விலை குறைவாக இருந்தது.

அதன்படி உக்கடம் லாரிபேட்டை மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. அதுவே நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

லாரிபேட்டை மீன்மார்க்கெட்டில் நேற்று மீன்களின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு (கடந்த வார விலை அடைப்புக்குறிக்குள்) :-

பாறை மீன் ரூ.200 (ரூ.400), ஊழி ரூ.150 (ரூ.350), மத்தி ரூ.100 (ரூ.200), நெத்திலி ரூ.150 (ரூ.250), சங்கரா பெரியது ரூ.180 (ரூ.250), செம்மீன் ரூ.300 (ரூ.400), ராமேஸ்வரம் புளு நண்டு ரூ.200 (ரூ.400), சாதா நண்டு ரூ.120 (ரூ.250), கோலா ரூ80 (ரூ.180) -க்கு விற்பனையானது.

காரணம் என்ன?

இது குறித்து மீன்மார்க்கெட் வியாபாரி காதர் கூறுகையில், உக்கடம் லாரிபேட்டை மீன் மார்க்கெட்டுக்கு கேரளாவில் இருந்து தினமும் 10 டன் வரை மீன் வரத்து உள்ளது. ஆடி மாதம் முடிந்து விட்டதால் மீன் நுகர்வு அதிகளவு உள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக மீன் விலை குறைந்து உள்ளது என்றார்.


Next Story