ஆழ்கடல் படகிற்கான கடனை ரத்து செய்ய வேண்டும்


ஆழ்கடல் படகிற்கான கடனை ரத்து செய்ய வேண்டும்
x

ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம்


ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மனு

ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், சேசுராஜ், கிளார்வின் உள்ளிட்டோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாற்றுத்தொழிலாக நீலப்புரட்சித்திட்டத்தின் கீழ் ஆழ்கடல் செவில் வலை மீன்பிடிப்படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 35 மீனவ குடும்பங்களுக்கு படகுகள் வழங்கப்பட்டது.

தற்போது வரலாறு காணாத டீசல் விலை உயர்வாலும், மீன்பிடி உதிரிப்பாகங்கள் விலையேற்றத்தாலும், சூரை மீன்கள் விலை குறைவாலும், படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் வகையில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம்.

மானியம்

படகுகள் மற்றும் வலைகள் வாங்குவதற்கு அரசு மானியம் போக, வெளி நபர்களிடம் வாங்கிய கடன் சுமையாலும், படகுகள் மீன்பிடிப்பு நஷ்டத்தாலும், சூரை மீன்பிடிக்க இடம் இல்லாத காரணத்தினாலும், நாகை மாவட்டம் நாகூர் மீனவர்களினால் ஏற்படும் தொல்லையாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

குடும்ப வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் நாங்கள் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வங்க கடலில் நாகூர் மீனவர்கள் எங்களை மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. எங்களுக்காக அமைக்கப்பட்ட துறைமுகங்களில் பாதுகாப்பு இல்லை. ஐஸ், டீசல் படகில் ஏற்றும் வசதி எதுவும் இல்லை. இதனால் ஆழ்கடல் மீன்பிடி படகிற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகிறோம்.

உறுதி

எனவே, எங்களின் நிலை உணர்ந்து நாங்கள் வாங்கிய வங்கி கடனை தள்ளுபடிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மீன்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story