விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அங்காடியில் மீன் விற்பனை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்


விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அங்காடியில் மீன் விற்பனை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அங்காடியில் மீன் விற்பனையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனிச்சம்பாளையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடியில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். துரை ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, மீன் விற்பனை அங்காடியில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சுகாதாரமாக

இந்த அங்காடியில் மீன் கழிவுகளை சுகாதாரமான முறையில் தூய்மைப்படுத்துவதற்கு மீன் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே யாருக்கும் சிரமம் ஏற்படாத வகையில் அனைத்து கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு நவீன மீன் விற்பனை அங்காடியில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மீன்கள் மொத்த விற்பனைக்கு தனியாக ஒரு பகுதியும், சில்லறை விற்பனைக்கு தனியாக ஒரு பகுதியும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மீன் விற்பனை அங்காடியை சுகாதாரமாக வைத்துக்கொள்வதற்கு மீன் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கும் தேவைப்படுகிறது. இந்த மீன் அங்காடியின் மூலம் மீன் விற்பனையாளர்கள் மட்டும் பயன்படுவது மட்டுமல்லாமல் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி பயன்பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் ரமேஷ், தமிழ்மாநில பருவதராஜகுல மீனவர் சங்க நிறுவனர் கல்வியாளர் இ.சாமிக்கண்ணு, மீனவர் அறக்கட்டளை ஆலோசனைக்குழு உறுப்பினர் இ.எஸ்.செந்தில்குமார், நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், பத்மநாபன், சத்தியவீரா மற்றும் விழுப்புரம் நகர மொத்த மீன் வியாபார சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story