படகு மோதி மீனவர் பலி
படகு மோதி மீனவர் பலியானார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிங்கித்துறை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி லதா. இவர்களின் மூத்த மகன் ஜனோஸ்டன் (வயது 23). மீனவரான இவர் அப்பகுதியை சேர்ந்த லிவிங்ஸ்டன் என்பவர் பைபர் படையில் மீன்பிடிக்க சென்றார். நேற்று முன்தினம் காலை கடலில் மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு வந்தனர். பின்னர் படகை கடலில் இருந்து கரைக்கு ஏற்றும் பணியில் சக ஊழியர்களுடன் ஜனோஸ்டன் தூக்கிக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் தவறி கீழே விழுந்த போது, படகு மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஜனோஸ்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காயல்பட்டினம், திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திருச்செந்தூர் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் இறந்ததை தொடர்ந்து சிங்கித்துறையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.