தொண்டி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
தொண்டி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
தொண்டி,
தொண்டி, முள்ளி முனை, காரங்காடு, நம்புதாளை மற்றும் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஓமன், சவுதி அரேபியா, துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது துபாய், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன் போன்ற நாடுகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அங்கு மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வேலையில்லாததின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து வெளிநாடுகளில் மீன் பிடித்து தற்போது சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் கூறியதாவது:- மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வளைகுடா நாடுகளில் அதிக அளவில் மீன் பிடித்து வருகிறோம். தற்போது அங்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் அங்கே வேலை இருக்காது. மேலும் அங்கு தற்போது கடும் வெயில் காலமாக இருப்பதால் அங்கு இருப்பது சிரமம். எனவே சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். இங்கு நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அக்டோபர் மாதம் தடைக்கால் முடிவுக்கு வந்தபின் மீண்டும் அங்கு சென்றுவிடுேவாம் என்றார்.