தேங்காப்பட்டணம் துறைமுக விவகாரத்தில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்;அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
தேங்காப்பட்டணம் துறைமுக விவகாரத்தில் மீனவர்கள் நடத்திய போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கடை,
தேங்காப்பட்டணம் துறைமுக விவகாரத்தில் மீனவர்கள் நடத்திய போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
தேங்காப்பட்டணம் துறைமுகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களில் உள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. துறைமுகத்தின் முகத்துவாரம் அமைக்கப்பட்ட கட்டமைப்பில் உள்ள கோளாறு காரணமாகத் தான் இந்த விபத்து நேரிடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மீனவர்கள் போராட்டம்
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்ற மீனவர் துறைமுக நுழைவாயில் பகுதியில் படகு கவிழ்ந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
தற்போது துறைமுக நுழைவு வாயிலில் உள்ள மணல் திட்டுகளை அகற்றாமல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதில்லை என முடிவெடுத்தபடி கடந்த சில நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மணல் அள்ளும் எந்திரமும் கொண்டு வரப்பட்டு அலை தடுப்புச் சுவர் பகுதிகளில் பணிகளும் தொடங்கப்பட்டன.
வாபஸ்
ஆனால் இந்த பணிகளால் எந்தவித பலனும் இல்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியதோடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மாலை துறைமுக அலுவலகத்தில் மீனவ பிரதி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட மீன்வளத்துறை இயக்குனர் காசிநாத பாண்டியன், இணை இயக்குனர் விஜில் கிராஸ், தூத்தூர் மற்றும் இணையம் மண்டல மீனவ சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் 15 நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதை அடுத்து நாளை முதல் வழக்கம்போல் துறைமுகம் இயங்கும் என மீனவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் படி சீரமைப்பு பணிகள் நடைபெறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக அரசின் கவனத்தில் கொண்டு செல்ல மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.