2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக நேற்று 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
குளச்சல்:
குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக நேற்று 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
சூறைக்காற்று
குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலில் மீ்ன்பிடிப்பிலும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்கள் கரையோர பகுதிகளிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வந்தது. இதன்காரணமாக நேற்று முன்தினம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் அனைத்தும் குளச்சல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், பெரும்பாலான விசைப்படகுகள் மற்றும் வள்ளங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீனவர்கள் கவலை
இதற்கிடையே ஒரு சில விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பின. அந்த விசைப்படகுகளில் சூறை மீன்கள், புல்லன் வகை இறால் மீன்களும் கிடைத்தன. அவை துறைமுக ஏலக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு ஏலமிடப்பட்டது. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
விசைப்படகுகளில் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்ததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலையில் ஆழ்ந்தனர்.