பவளப்பாறைகளை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும்


பவளப்பாறைகளை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும்
x

மீன் வளர்ச்சிக்கு உதவும் பவளப்பாறைகளை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும் என கடல் தகவல் மைய இயக்குனர் அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மீன் வளர்ச்சிக்கு உதவும் பவளப்பாறைகளை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும் என கடல் தகவல் மைய இயக்குனர் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

பூம்புகாரில் உள்ள வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தேசிய கடல் தகவல் மையம் இணைந்து, கடலில் ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றம் குறித்தும், மீன்பிடி தொழில் வளர்ச்சி குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

இந்த கருத்தரங்கத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வேல்விழி முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் வரவேற்றார். இதில் ஐதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கடல் தகவல் மையத்தின் இயக்குனர் டாக்டர் சீனிவாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீன்பிடி பருவகாலம் மாற்றம்

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மீன்பிடி பருவ காலம் கூட மாற்றம் அடைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மீனவர்கள் கவனமாக மீன்பிடித்தொழிலை செய்ய வேண்டும். மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக விளங்குவது பவளப்பாறைகள். அவற்றை மீனவர்கள் பாதுகாக்க வேண்டும். பவளப்பாறைகள் நிறைந்த பகுதியில் மீன் பிடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கடல் பசுக்களை பிடிக்கக்கூடாது

கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட மீன் இனங்களை பிடிக்கக்கூடாது. தற்போது நவீன கருவிகள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலை மாசு படுத்தாத வண்ணம் தொழில் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கடலோர காவல் படை துணை கமாண்டன்ட் கணேசன், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பூம்புகார், வானகிரி, புது குப்பம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story