ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம்
காவடி ஊர்வலத்தில் செல்போனை பறிகொடுத்த புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி மீனவர்கள் ேநற்று முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
காவடி ஊர்வலத்தில் செல்போனை பறிகொடுத்த புதுமாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி மீனவர்கள் ேநற்று முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவடி ஊர்வலம்
ராமேசுவரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவருடைய மனைவி முனீசுவரி. இவர்களுடைய மகன் முகேஷ் (வயது 24). நாட்டுப் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
கடந்த 5-ந்தேதி பங்குனி உத்திரத்தன்று புது ரோடு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். முகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆடியபடி சென்றுள்ளார்.
என்.எஸ்.கே.வீதி சாலையில் ஊர்வலம் சென்றபோது முகேஷ் வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்து தொலைந்துவிட்டது. அப்போது அந்த செல்போனை மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் எடுத்துச் சென்றதாக அதைப் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.
வாலிபர் அடித்துக்கொலை
இதை தொடர்ந்து முகேஷ் மாந்தோப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்தவரிடம் தனது போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக சேர்ந்து முகேசை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகேஷ் நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த நிலையில் வாலிபர் முகேசை அடித்துக்கொன்ற கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முகேஷ் சாவுக்கு நீதி கேட்டும், அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் மற்றும் புது ரோடு, ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம் உள்ளிட்ட ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் தாசில்தார் அப்துல் ஜபார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வருவாய் கோட்டாட்சியர் கோபு ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் மற்றும் அந்த கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், தாசில்தார்கள் அப்துல்ஜபார், உமா மகேஸ்வரி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மீனவர்கள் தரப்பில் கூறும் போது. "முகேஷ் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு அரசு தகுந்த நிவாரண நிதி வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ராமேசுவரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ளூரை சேர்ந்த போலீசார் பலர், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அதனால் ராமேசுவரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வெளியூர் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்" என்றனர்.
துறை ரீதியாக நடவடிக்கை
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூறியதாவது:-
மீனவரை அடித்து கொலை செய்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மீது விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மூலம் மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி பெற்று தரப்படும். அரசு வேலை வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் பேசி அதற்கான வழிவகை மேற்கொள்ளப்படும். கஞ்சா, மது விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ளூர் போலீசார் பணியில் இருந்தால் இடமாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும், என்றார்.
திடீர் சாலை மறியல்
போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். சிறிது நேரத்தில் திடீரென ஏராளமான மீனவப் பெண்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து தங்கள் முன் நேரில் நிறுத்த வேண்டும் என கோஷமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பெண்களுடன் போலீசார் மற்றும் அந்த கிராம நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மீனவர்களின் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து ராமேசுவரம் பஸ் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்
இதற்கிடைேய இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜகுரு, மற்றொரு பாலமுருகன், புஷ்பராஜ், ராம்குமார், ராம்கி ஆகிய 5 பேரை ராமேசுவரம் துறைமுக போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.