ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம்
ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மீன் பிடிக்க சென்ற 27 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் படகளுடன் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கண்டனம் தெரிவிக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கண்டும் கொள்ளாமல் உள்ள மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அதுபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும், மீனவர்களையும், மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இலங்கை கடற்படையால் கைதான 27 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி வருகின்ற 18-ந்தேதி (புதன்கிழமை) அன்று பாம்பன் ரோடு பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மாநிலம் தழுவிய மீனவர்கள் அமைப்புகளோடு இணைந்து ரெயில் மறியல் போராட்டங்களும் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும் போராட்ட தேதி கூட்டம் நடத்தி அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.