பழவேற்காட்டில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்


பழவேற்காட்டில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2022 11:29 AM GMT (Updated: 27 May 2022 11:48 AM GMT)

பழவேற்காட்டில் 4-வது நாளாக மீனவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான 2 துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைமுகங்கள் தொடங்கும்போது பல்வேறு போராட்டங்களை பழவேற்காடு மீனவர்கள் நடத்தினர். பின்னர் தமிழக அரசு தலையிட்டு 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. இதனையடுத்து 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீனவர்கள் தனியார் துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தியபோது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் கடந்த 23-ந் தேதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், வேலையில் உள்ள 250 பேருக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தனியார் துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது 299 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து 2-வது நாளாக கருப்புக்கொடியேந்தி படகுகள் மூலம் வந்து துறைமுகங்களின் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 3-வது நாளாக பழவேற்காடு பாலத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 4-வது நாளாக நேற்று மீனவபெண்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் பழவேற்காடு பகுதிக்கு அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. மேலும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் தலைமையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் அரசு அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மீனவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கணக்கான பழவேற்காடு ஏரியில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலில் சென்று காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்தின் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:-

பழவேற்காடு மீனவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story