எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்

ஒருவாரத்துக்கு பிறகு கரை திரும்பிய நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாவல், வஞ்சிரம் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது.
ஒருவாரத்துக்கு பிறகு கரை திரும்பிய நிலையில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாவல், வஞ்சிரம் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது.
விசைப்படகு மீனவர்கள்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லார், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்பட ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த 2 மாதங்களும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கரை திரும்பினர்
இந்த ஆண்டும் வழக்கம்போல் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. 61 நாட்கள் தடைக்காலத்துக்கு பிறகு மீனவர்கள் கடந்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர்.
வியாபாரிகள் ஆர்வம்
இதை முன்னிட்டு மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், மீன்பிரியர்கள் ஆர்வத்துடன் நேற்று அதிகாலை முதலே நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசைப்படகுகளில் மட்டுமே போதுமான அளவு மீன்கள் கிடைத்த நிலையில் பெரும்பாலான படகுகளில் நஷ்டத்தோடு கரை திரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் தற்போது வரை அமலில் உள்ளதாலும், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட கடல் பகுதியில் காற்று வீசுவதாலும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு விசைப்படகுக்கும் டீசல், ஐஸ், உணவுப் பொருட்கள் என ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்தோம்.
ரூ.2 லட்சம் நஷ்டம்
பல லட்ச ரூபாய் செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் சூறைக்காற்று காரணமாக விரைவாக கரை திரும்ப நேரிட்டது. போதிய மீன்கள் கிடைக்காமல், ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இ்ருந்து வியாபாரிகள் நாகையில் குவிந்தனர். அவர்கள் மீன் விலையை பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர்.
உள்ளூர் மீன் பிரியர்கள் விலை ஏற்றம் காரணமாக மீன்களை வாங்குவதற்கு சிரமப்பட்டனர்.
விலை நிலவரம்
நாகையில் நேற்றைய மீன் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) வருமாறு:- இறால்-ரூ.350 முதல் ரூ.600 வரை. கணவா- ரூ.460. வஞ்சிரம்- ரூ.600 முதல் ரூ.ஆயிரத்து 300 வரை. வாவல்-ரூ.ஆயிரம் முதல் ரூ.ஆயிரத்து 400 வரை. திருக்கை- ரூ.350. வெள்ளை திருக்கை-ரூ.450. பாறை- ரூ.300 முதல் ரூ.500 வரை. நெத்திலி- ரூ.150. சங்கரா- ரூ.250. கடல் விறால்- ரூ.600. சீலா- ரூ.400. பால் சுறா- ரூ.500. கிழங்கான்-ரூ.400. நண்டு- ரூ.550.
சீலா, திருக்கை போன்ற ரக மீன்கள் ஓரளவு அதிக எடையுடன் கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.






