நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடரும் சம்பவம்
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தும் இந்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவித பயனும் இல்லை.
ஆனாலும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை யினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நாகையை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நேற்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகை மீனவர்கள்
நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன்(வயது 35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 6-ந் தேதி மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த காமராஜ்(40), பூவரசன்(22), அன்பு(32), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன்(52), பாலு(55), செல்லதுரை(35), முருகானந்தம்(42), ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஸ்டீபன்(25), முருகன்(24) ஆகிய 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
உடனடியாக மீட்க கோரிக்கை
மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை கீச்சாங்குப்பம் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.