உலக மீனவர் தினம்


உலக மீனவர் தினம்
x

உலக மீனவர் தினம்

ராமநாதபுரம்

உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது. வளரும் நாடுகளில் சுமார் 30 மில்லியன் முதல் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டு மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளனர். உலக மக்களுக்கு தேவையான உணவுப் புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து பெறப்படுகிறது. மனித மக்கள் தொகை ஆண்டுக்கு 100 மில்லியன் டன் மீன்களை உணவாக கொள்கிறது. இந்தியாவில் 7,516 கிலோமீட்டர்கள் (4,670 மைல்) கடல் கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் இறங்கு நிலையங்களும் உள்ளன.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.07 சதவீத பங்களிப்பு மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் மீன்பிடித்தல் ஒரு முக்கிய துறையாகும். இந்தியாவில் மீன்பிடித் துறையானது நாட்டில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. உலக உற்பத்தியில் 7.96 சதவீத பங்கு வகிக்கும் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் வளர்ப்பு மூலம் மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. 2020-21 நிதியாண்டில் மொத்த மீன் உற்பத்தி 14.73 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி மீன்பிடித் தொழில் 334.41 பில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கிறது.

தற்போது, வேதனையான தகவல் என்னவென்றால், இன்றைக்கு தங்கள் அருகில் உள்ள நீர் வளங்களில் மீன் வளம் குறைந்து வருவதால், மீனவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெகு தொலைவில் மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலை கப்பல்கள், அடிமட்ட இழுவை இழுத்தல் மற்றும் நீடிக்க முடியாத மீன்பிடி முறைகள் மூலம் மீன் வளம் குறைந்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில், உலகின் 3-ல் 2 பங்கு மீன்வளம் அதிகமாக அல்லது முழுமையாக அறுவடை செய்யப்பட்டு விட்டதாகவும், 3-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டவை மீன் வளத்தின் அத்தியாவசிய வாழ்விடங்கள், மாசுபாடு மற்றும் உலகளாவிய இழப்பு போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கிறது.இந்த பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து தீர்க்காத நிலையில், நெருக்கடி மேலும் ஆழமடையும். இந்த சூழலில் உலக மீன்பிடி தினம் இந்த பிரச்சினைகளை உலகின் கவனத்திற்கு முன்னிலைப்படுத்த உதவுகிறது.

-ராஜேஷ், உதவி பேராசிரியர், விலங்கியல் துறை,அமெரிக்கன் கல்லூரி, மதுரை.


Next Story