சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா களைகட்டியது
சிங்கம்புணரி அருகே அய்யாப்பட்டியில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
சிங்கம்புணரி, ஜன, 31-
சிங்கம்புணரி அருகே அய்யாப்பட்டியில் மீன்பிடித் திருவிழா களைகட்டியது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யாபட்டி மேலையூர் ஊராட்சியில் உள்ள மேலிக்கண்மாய் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயப் பணிகள் முடிவுற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியதால் கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதைதொடா்ந்து நேற்று காலை அய்யா பட்டி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், மக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடி வீசினர். பின்னா் கண்மாய் கரையை சுற்றி நின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பச்சைக்கொடி காண்பித்தவுடன் கண்மாய்க்குள் சென்று மீன்களை பிடிக்க தொடங்கினர்.
பாம்புகளும் சிக்கின
ஆலம்பட்டி, மாதவராயன்பட்டி, முறையூர், சூரக்குடி, முத்துச்சாமிபட்டி, சியாமுத்துபட்டி, எஸ்.எஸ்.கோட்டை, செவல்பட்டி, கிருஷ்ணாபுரம், நாட்டார் மங்கலம், கருப்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி பல வகை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தொடங்கினர். இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. சிலரது வலைகளில் பாம்புகளும் சிக்கின. இதில் அனைவருக்குமே குறிப்பிட்ட அளவு மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்பிடித் திருவிழாவால் சுற்றுவட்டார கிராமத்தினா் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது. இது போன்ற மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால் வருங்காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.