சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே ஜநூத்தி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே ஜநூத்தி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம். குறிப்பாக மழை நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் உள்ள தண்ணீர் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சிங்கம்புணரி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள ஜநூத்திப்பட்டி ஜநூத்தி கண்மாய் 150 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீர் மூலம் பாசன வசதி பெறுகிறது.

தற்போது இப்பகுதியில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை ஜநூத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சைக்கொடி காட்டினர்.

மீன்குழம்பு கமகமத்தது

அப்போது அங்கு கரையில் நின்ற சிங்கம்புணரி, சிவபுரிபட்டி, வேங்கைபட்டி, தேனம்மாள்பட்டி, வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் கண்மாயில் இறங்கி பலவகை வலைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். அதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. அதிக அளவில் கட்லா, லோகு மீன்கள் சிக்கியது. சில பேர் வலைகளில் பாம்புகளும் சிக்கின.

பிடிக்கப்பட்ட மீன்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்தனர். இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story