சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் மீன்பிடி திருவிழா:கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்


தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் மீன்பிடி திருவிழா களை கட்டியது. கண்மாயில் இறங்கி கிராம மக்கள் வலைகளை விரித்து மீன்களை அள்ளினர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் மீன்பிடி திருவிழா களை கட்டியது. கண்மாயில் இறங்கி கிராம மக்கள் வலைகளை விரித்து மீன்களை அள்ளினர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் உள்ள வேங்கைப்பட்டி புதுவயல் புதுக்கண்மாய் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயப் பணிகள் முடிவுற்று நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடி வீசினர். அதைத்தொடர்ந்து கண்மாய் கரையை சுற்றி நின்ற 500-க்கும் மேற்பட்ட மீன்பிடியாளர்கள் கண்மாய்க்குள் சென்று வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க தொடங்கினார்கள்.

இதில் சிங்கம்புணரியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடித்திருவிழாவில் கலந்து கொண்டனர். .இதில் கட்லா, லோகு, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அதிக அளவில் விரால் மீன்கள் கிடைத்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோன்ற மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால் வருங்காலங்களில் மழை பெய்து விவசாயம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிப்பட்டியில் விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாயில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் நிறைவுற்ற நிலையில் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கியது. காலை முதலே சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்மாயை சுற்றிலும் காத்து நின்றனர்.

ஊர்முக்கியஸ்தர்கள் கொடியசைத்ததை தொடர்ந்து கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா, வலை, கச்சா, தூரி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி, விரால், கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு மீன்களை பிடித்தனர்.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு போட்டிபோட்டு மீன்களை அள்ளிச்சென்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் பாரம்பரியமாக இப்பகுதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story