ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா


ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் ஒரே நேரத்தில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் அடுத்தடுத்து உள்ள கண்மாய்களான விநாயகர் கண்மாய், பாப்பன் கண்மாய் மற்றும் புது ஊருணி ஆகிய 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. பிரான்மலை, ஒடுவன்பட்டி, முட்டாகட்டி, கிருங்காகோட்டை, மேலப்பட்டி, அணைக்கரைபட்டி, வையாபுரிபட்டி, வேங்கைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க தயாராக நின்று இருந்தார்கள்.

ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வெடி போட்டு தொடங்கி வைத்தனர்.

உடனே கண்மாய்களை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீன்களை அள்ள கண்மாய்களுக்குள் இறங்கினர். உபகரணங்களை பயன்படுத்தி விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்தனர்.

கமகமத்த மீன் குழம்பு

விடுமுறை நாள் என்பதால் ஒற்றுமையாக குடும்பம் குடும்பமாக சென்று கண்மாய்க்குள் மீன்களை சல்லடை போட்டு தேடிப்பிடித்து அள்ளிச் சென்றனர். இதனால் பிரான்மலையை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story