சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே உள்ள பெரிய கூவாண கண்மாய் மற்றும் சிறிய கூவாண கண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நெல் அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் இரண்டு கண்மாய்களிலும் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கம்புணரி, பிரான்மலை, குமாரிபட்டி, வேங்கைப்பட்டி, சுக்காம்பட்டி, கருங்காலக்குடி போன்ற சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலை முதலே கண்மாயை சுற்றி ஒன்றுகூடினர். அவர்கள் ஊத்தா, கச்சா, வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் கண்மாயிக்குள் பாய்ந்து மீன்களை பிடிக்க தயாராக இருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் மீன்பிடி திருவிழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மீன்குழம்பு வாசனை
அப்போது கண்மாயை சுற்றி காத்திருந்த ஏராளமான கிராம மக்கள் மீன்களை அள்ள பாய்ந்து குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். அவர்கள் பல்வேறு வலைகளை கொண்டு விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட நாட்டுவகை மீன்களை பிடித்தனர்.
விடுமுறை நாள் என்பதால் மீன்பிடி திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பிடித்த மீன்களை தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர். இதனால் சுற்று வட்டார கிராமம் முழுவதும் மீன்குழம்பு வாசனையால் கமகமத்தது.