சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊருணியில் மழைக்காலத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரில் கிராம மக்கள் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தனர். படிப்படியாக ஊருணியில் நீர் வற்றி நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கு மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே ஒடுவன்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள வையாபுரிபட்டி, பிரான்மலை, வேங்கை பட்டி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊத்தா, கூடையுடன் வந்திருந்தனர். கிராம வளர்ச்சிக்காக தலா 100 ரூபாய் செலுத்தி மீன் பிடிக்க காத்திருந்தனர்.
நம்பிக்கை
இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் ஊருணியின் கரையில் நின்று வெள்ளைக்கொடி வீசியவுடன் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் ஊருணிக்குள் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசாயம் செழித்து கிராம மக்களின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.