சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது

சிவகங்கை

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே எஸ்.கோவில்பட்டியில் உள்ள அம்மி கண்மாய் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் பாசன வசதி பெறுகிறது. நெல் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலம் என்பதால் தண்ணீர் வேகமாக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து விவசாயம் செழிக்க வேண்டியும், மழை வேண்டியும் அம்மி கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. நேற்று காலை முதலே கோவில்பட்டி, சூரக்குடி, முத்துச்சாமிபட்டி, முறையூர், அய்யாபட்டி, எஸ்.எஸ்.கோட்டை, கோழிக்குடிபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்மாயில் குவிந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட பல்வேறு வலைகளுடன் கண்மாய் கரையில் காத்து நின்றனர்.

மீன்குழம்பு வாசனை

ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வெள்ளை வீசி தொடங்கி வைத்தனர். உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாய்க்குள் பாய்ந்து சென்று போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.

மீன்களை சல்லடை போட்டு அளசியதில் விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் ஏராளமாக வலைகளில் சிக்கின. இதையடுத்து பிடிபட்ட மீன்களை தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து ருசித்து சாப்பிட்டனர். இதன் காரணமாக எஸ்.கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story