2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா


2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா
x

காட்டுப்பட்டி, மணப்பட்டி கிராமங்களில் 2 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்தனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

மீன்பிடி திருவிழா

நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் தொடங்கும் முன் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் பாசனக் கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஏனக்கண்மாய் மற்றும் மணப்பட்டி கிராமத்தில் உள்ள கிளரங்கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதில் சாதி, மதம் பாராமல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையிலேயே கண்மாயில் குவிந்தனர். பின்னர் பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்க தொடங்கினர்.

அதில் ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கண்மாயில் பிடித்த மீன்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story