மரவனூர் பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா


மரவனூர் பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா
x

மரவனூர் பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா நடந்தது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த மரவனூரில் உள்ள பெரியகுளம், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பெய்த மழையால் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதைத்தொடர்ந்து குளத்தில் மீன்களும் அதிகமாக காணப்பட்டன. தற்போது குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக மரவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடக்கமாக நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் அருகே கும்மியாட்டம் நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு வாகனங்களில் ஏராளமான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். நேற்று காலை ஊர் முக்கியஸ்தர் கபில்தேவ் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து குளத்தில் இருந்த ஏராளமான மக்கள் வலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. குளத்தின் ஒரு புறத்தில் சுமார் 4 கிலோ எடையுள்ள மீன்கள் வரை சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர். மரவனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து மீன்களை பிடித்துச் சென்றனர்.


Next Story