வேங்கைக்குறிச்சி புங்கன்குளத்தில் மீன்பிடி திருவிழா
வேங்கைக்குறிச்சி புங்கன்குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் புங்கன்குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் புங்கன்குளத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில், அதில் அதிக அளவில் மீன்கள் காணப்பட்டன. ஆனால் தற்போது நீர் இருப்பு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் வகையில் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
அதன்படி நேற்று காலை வேங்கைக்குறிச்சி ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை வீசி விழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர். மீன் பிடி வலைகளையும், சிலர் கொசுவலை, மூங்கில் கூடை, சேலை மற்றும் நைலான் பைகளையை பயன்படுத்தியும் மீன்களை பிடித்தனர். கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என அனைவருக்கும் மீன்கள் சிக்கியன. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குறிப்பாக பிடிபட்ட பெரும்பாலான மீன்கள் சுமார் 2 கிலோவிற்கு மேல் இருந்தன. ஒரு மீன் 7 கிலோ எடை இருந்தது. இதனால் ஒரு மீன் சிக்கினாலும் போதும் என்று பொதுமக்கள் மீன்களை பிடித்து சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.