பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா
விராலிமலை அருகே கோமங்களம் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
விராலிமலை:
மீன்பிடி திருவிழா
விராலிமலை தாலுகா கோமங்களம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு பெய்த கனமழையால் தண்ணீர் நிரம்பியது. தற்போது இக்குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பெரியகுளத்தில் காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவதால் கோமங்களம், இனாம் குளத்தூர், விட்டமாபட்டி, கல்குடி, பொருவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளத்தின் கரையில் திரண்டிருந்தனர்.
போட்டிப்போட்டு மீன்கள் பிடித்தனர்
இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளக்கரையில் தயாராக நின்ற திரளான பொதுமக்கள் வலை, தூரி, கச்சா, பரி உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி உபகரணங்களை கொண்டு பெரியவர்கள், சிறியவர்கள் என போட்டிப்போட்டுக் கொண்டு அனைவரும் மீன்களை பிடிக்க குளத்தில் இறங்கினர். இதில் கட்லா, கெண்டை, குரவை, விரால், ரோகு, மீசை கெழுத்தி உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்துச் சென்றனர்.
சமைத்து சாப்பிட்டனர்
சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக குளத்தில் நீர் வற்றாமல் இருந்ததால் சிறிய மற்றும் பெரிய வகை மீன்கள் அதிக அளவில் இருந்து வந்தது.
இதனால் குளத்தில் பிடிக்கப்பட்ட சில மீன்களின் எடை சுமார் 2 முதல் 10 கிலோ வரை இருந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து மீன்பிடிக்க வந்த பொதுமக்கள் அனைவருக்கும் அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் தாங்கள் கொண்டு வந்த சாக்கு மற்றும் கட்டைப் பைகளில் மீன்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.