சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:45 PM GMT)

சிங்கம்புணரி அருகே பிள்ளையார் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே பிள்ளையார் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊராட்சி ஒடுவன்பட்டி மலை அடிவார பகுதியில் பிள்ளையார் ஊருணி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊருணி நீரை பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் பாசனவசதி பெற்று வருகிறது. நெல் அறுவடை பணிகள் முடிவுற்று கோடை காலம் என்பதால் தண்ணீர் வேகமாக குறைய தொடங்கியது.

அதனை தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த மீன்பிடி திருவிழாவில் மேலப்பட்டி, ஒடுவன்பட்டி, முட்டாக்கட்டி, பிரான்மலை, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, எஸ்.வி.மங்களம், சிவபுரிபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். காலை முதலே ஊருணி அருகே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மீன்பிடிக்க காத்திருந்தனர்.

விவசாயம் செழிக்க

ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் பயன்படுத்தி மீன்பிடிக்க தயாராக காத்திருந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை கொடி வீசி மீன்பிடி திருவிழாவை ெதாடங்கி வைத்தனர். உடனே ஊருணியை சுற்றி காத்திருந்த கிராமத்தினர் மீன்களை பிடிக்க ஊருணிக்குள் இறங்கினர்.

மீன்பிடி உபகரணங்கள் மூலம் விரால், சிலேபி, கெண்டை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் பிடித்தனர். குறிப்பிட தகுந்த அளவே மீன்கள் கிடைத்தாலும் அனைவரும் பங்கிட்டு எடுத்து சென்றனர். இதனால் கிராமத்தில் அனைவரது வீட்டிலும் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story