மீன்பிடி தடைக்காலம் நிறைவு - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள்


மீன்பிடி தடைக்காலம் நிறைவு - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள்
x

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, மீன்வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல். ஜூன் 14-ந் தேதி (நேற்று) வரை அமலில் இருந்தது.

மீன்வரத்து குறைவு

இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் உள்ளிட்ட பெரிய படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. பைபர் மற்றும் நாட்டுப்படகில் குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் 2 மாத காலமாக சென்னையில் மீன்வரத்து குறைந்து, மீன் விலை அதிகமாக காணப்பட்டது,

கடலுக்குள் சென்ற மீனவர்கள்

இந்த தடையானது நேற்று நள்ளிரவு 12 மணியோடு முடிவடைந்தது. இதனால் காசிமேட்டில் நேற்று அதிகாலையிலிருந்து விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்ல ஆயத்தமாகினர். இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகுகள் மற்றும் 1100 பைபர் படகுகள் நேற்று மாலை முதல் கடலுக்குள் சென்றது.

முன்னதாக மீனவர்கள் படகுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்களில் சிலர் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவர் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், மீன் விலை கணிசமாக குறையும் என மீன் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தை விட பரபரப்பாக காணப்பட்டது.


Next Story