பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீன்வியாபாரிகள் போராட்டம்
பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் பொக்லின் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மீன் வியாபாரிகள் பொக்லின் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் மார்க்கெட்
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. இங்கு 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. மீன்மார்க்கெட் இயங்கி வந்த இடத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
மீன் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு அருகே கடை அமைத்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதித்தனர். வியாபாரிகள் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகே கடை அமைத்ததும், பழைய மார்க்கெட்டில் குறிப்பிட்ட கடைகளை இடித்து தரைமட்டமாக்கினர். ஆனால் தற்காலிக கடை அமைத்துள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மீன் கடைகள் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், மீன் வியாபாரிகள் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து தற்காலிகமாக தகரத்திலான கூரைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
போராட்டம்
நேற்று மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் பொக்லின் எந்திரம் மூலம் மீதமுள்ள மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க வந்தனர். ஆனால் தங்களுக்கு வேறு இடம் வழங்காமல் கட்டிடத்தை இடிக்க கூடாது என்று கூறி மீன் வியாபாரிகள் சங்கத்தலைவர் கலியமூர்த்தி தலைமையில், மீன் வியாாபரிகள் பொக்லின் எந்திரத்தை முற்றுகையிட்டு அதன் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் மீன் மார்க்கெட்டிற்கு வேறு இடத்தை ஒதுக்கிவிட்டு, பின்னர் பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
தொடர்ந்து, மாநகராட்சி உறுப்பினர்கள் அசோக்குமார், சாகுல்அமீது ஆகியோர் மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாராசுரம் பஸ் நிறுத்தத்தின் கிழக்கு பகுதியில் மீன் மார்க்கெட்டை அமைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.