தொழிலாளிக்கு செயற்கை கால்கள், கைகள் பொருத்தம்

தமிழகத்தில் முதல் முறையாக கோவை தொழிலாளிக்கு செயற்கை செயற்கை கால்கள், கைகள் பொருத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
தமிழகத்தில் முதல் முறையாக கோவை தொழிலாளிக்கு செயற்கை செயற்கை கால்கள், கைகள் பொருத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
கட்டிட தொழிலாளி
கோவை மாவட்டம் அன்னூர் குமரன் குன்று வேப்பம்பள்ளத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 22) கட்டிட தொழிலாளி. கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி எதிர்பாராதவிதமாக நடந்த மின்சார விபத்தில் இவருடைய இரு கைகள், கால்களும் தீயில் கருகின. இதனால் அவர் தனது கால்கள் மற்றும் கைகளை இழந்து தவித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து தனது நிலை குறித்து தெரிவித்து உதவி கேட்டு கோரிக்கை மனு கொடுத்தார்.
அதன் அடிப்படையில் சுபாசுக்கு செயற்கை கால்கள் மற்றும் கைகள் பொருத்த கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ஆகியோருக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
செயற்கை கால்கள், கைகள் பொருத்தம்
இதையடுத்து சுபாசுக்கு செயற்கை கால்கள் மற்றும் கைகள் பொருத்துவதற்காக முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குனர் டாக்டர் வெற்றிச்செழியன் தலைமையில் செயற்கை அங்கக வடிவமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஆனந்தபாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் குறைவான எடையிலான 2 செயற்கை கால்கள் மற்றும் 2 செயற்கை கைகளை உருவாக்கி சுபாசுக்கு பொருத்தி சாதனை படைத்தனர்.
இதுகுறித்து டீன் நிர்மலா கூறும்போது, சுபாசுக்கு 2 கைகள், கால்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் மன ரீதியான பயிற்சி, நடை பயிற்சி அளித்தனர். இதன் மூலம் அவர் தற்போது கை, கால்களை அசைத்தவாறு நன்றாக நடக்கிறார்.
இந்த சிகிச்சையானது தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும். அதுவே அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது.
2 கால்கள் மற்றும் 2 கைகளை இழந்த ஒருவருக்கு தமிழகத்தில் முதல் முறையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயற்கை கால், கைகள் பொருத்தப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர் நேற்று சுபாஷ் கலெக்டர் சமீரனை சந்தித்து தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை கால்களை காண்பித்தும், கைகளால் கைக்குலுக்கியும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவ குழுவினருக்கு கலெக்டர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.






