சென்னை திருவேற்காட்டில் கத்திமுனையில் ராப் இசை கலைஞர் காரில் கடத்தல்; புதுக்கோட்டை அருகே மீட்பு
சென்னை திருவேற்காட்டில் சினிமா பாணியில் கத்திமுனையில் காரில் கடத்தப்பட்ட இசை கலைஞர், பொன்னமராவதியில் மீட்கப்பட்டார்.
ராப் இசை கலைஞர்
மதுரையை சேர்ந்தவர் தேவ்ஆனந்த் (வயது 29). ராப் இசை கலைஞரான இவர், நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தினார். கச்சேரி முடிந்ததும் தேவ்ஆனந்த், தனது குழுவுடன் காரில் அங்கிருந்து புறப்பட்டார். அவர்களில் 2 பேர் திருவேற்காட்டில் தங்கி இருப்பதால் அவர்களை திருவேற்காட்டில் இறக்கிவிட்டு கல்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தார்.
காரில் கடத்தல்
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர்களது காரின் மீது மோதியது. இதனால் தேவ்ஆனந்த், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தார். அந்த நேரத்தில் எதிரே வந்த மற்றொரு காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் தேவ்ஆனந்தை சுற்றி வளைத்தனர். பின்னர் "உனது அண்ணன் எங்களுக்கு பணம் தரவேண்டும்" என்று கூறி அவரை கத்திமுனையில் தாங்கள் வந்த காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச்சென்றனர். இதனால் அவருடன் வந்த இசைக்குழு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணன் பண மோசடி
விசாரணையில் தேவ்ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி பல பேருக்கு பணம் கொடுக்காமல் ரூ.2½ கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தலைமறைவாக உள்ள சிரஞ்சீவியை தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்காததால் சிரஞ்சீவியிடம் வேலை செய்த சந்திரசேகர் என்பவர் கொடுத்த தகவலின்பேரில் சிரஞ்சியின் தம்பி தேவ்ஆனந்த் சென்னைக்கு இசை கச்சேரிக்கு வந்து இருப்பதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சினிமா பாணியில் தேவ்ஆனந்த் கார் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு அவரை கடத்திச்சென்று இருப்பது தெரியவந்தது.
தனிப்படை தீவிரம்
இதற்கிடையில் போலீசார் தேவ் ஆனந்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது, "தனது அண்ணன் கொடுக்க வேண்டிய பணத்துக்காக தன்னை கடத்தி வைத்து உள்ளதாகவும், தான் நல்லமுறையில் இருப்பதாகவும்" கூறினார். அதன்பிறகு அவரது செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். இதுபற்றி திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் உதவி கமிஷனர் ராஜூவ்பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தேவ் ஆனந்தை கடத்திய நபர்கள் யார்? எந்த வழியாக சென்று கொண்டிருக்கிறார்கள்?. காரின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து கடத்தல்காரர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
செல்போன் சிக்னல்
கடத்தல்காரர்களின் செல்போன் எண்ணை வைத்தும், சுங்க சாவடிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது அந்த கார் மதுரை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுபற்றி மதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த காரை பின்தொடர்ந்து திருவேற்காடு தனிப்படை போலீசாரும், காருக்கு எதிரே மதுரை போலீசாரும் எதிரும், புதிருமாக துரத்தி வந்தனர். செல்போன் சிக்னலை வைத்து தங்களை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தங்கள் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். ஆனால் அதில் ஒருவர் மட்டும் அவர்களுக்கே தெரியாமல் செல்போனை 'ஆப்' செய்யாமல் ஆன் செய்து வைத்திருந்தார். அந்த செல்போன் சிக்னலை வைத்து கார் செல்லும் திசையை அறிந்த போலீசார், கடத்தல்காரர்களை வேகமாக விரட்டிச்சென்றனர்.
பொன்னமராவதியில் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நெய்குப்பை-வேந்தன்பட்டி சாலையில் சென்றபோது மதுரை போலீசாரும், திருவேற்காடு தனிப்படை போலீசாரும் பொன்னமராவதி போலீஸ் உதவியுடன் சினிமா பாணியில் தேவ் ஆனந்தை கடத்திச்சென்ற காரை சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்த கடத்தல் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.
காரில் கடத்தப்பட்ட தேவ்ஆனந்தை போலீசார் பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(31), முத்துப்பாண்டி(45), முத்து(36), சென்னையை சேர்ந்த கருப்பசாமி(31), காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன்(47) ஆகிய 5 பேரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.