மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு


மாவட்டத்தில் இந்த ஆண்டு  ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூல் செய்ய இலக்கு
x

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.2¼ கோடி கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

நாமக்கல்

கொடிநாள் வசூல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொடி நாள் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2021-ம் ஆண்டு 100 சதவீதம் கொடி நாள் வசூல் புரிந்த 25 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 2019-ம் ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு மேல் கொடி நாள் வசூல் புரிந்த 4 அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி, பேசியதாவது:-

ஆண்டுதோறும் நாடெங்கிலும் டிசம்பர் 7-ந் தேதி முப்படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாளுக்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.

கொடிநாள் நிதி வசூலில் கடந்த ஆண்டு நமது மாவட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். ஆனால் அதை விட அதிகமாக ரூ.2 கோடியே 39 லட்சத்து 4 ஆயிரம் வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளோம். இத்தொகை 112.13 சதவீதம் ஆகும். இந்த பணியயை சிறப்பாக மேற்கொண்ட பணியாளர்களை பாராட்டுகிறேன்.

ரூ.2¼ கோடி இலக்கு

2022-ம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு கொடிநாள் வசூல் இலக்காக ரூ.2 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கம் போல் இதற்கு அதிகமாக வசூல் செய்திட அனைத்து துறை அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

கொடிநாளில் வசூல் செய்யப்படும் நிதி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து 2021-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு விதமான நிதி உதவிகளாக மொத்தம் ரூ.40 லட்சத்து 93 ஆயிரத்து 485 வழங்கப்பட்டு உள்ளது.

சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவு

முன்னாள் படைவீரர்களுக்கென சிறப்பு வேலை வாய்ப்பு பிரிவு ஒன்று மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னாள் படை வீரர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கான கேட்பு பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்டு, பொது தகுதிகள் மற்றும் பதிவு மூப்பின்படியும் அவர்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றது. இதுவரை இவ்வாண்டில் மட்டும் 5 முன்னாள் படைவீரர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் 62 வயது வரையுள்ள முன்னாள் படைவீரர்களின் பெயர்கள் கோவில் பாதுகாப்பு பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கி, கொடி நாள் வசூலை கலெக்டர் தொடங்கி வைத்தார். முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் சிவக்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் செண்பகவள்ளி உள்பட அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story