தனுஷ்கோடியில் அணிவகுத்த பிளமிங்கோ பறவைகள்


தனுஷ்கோடியில் அணிவகுத்த பிளமிங்கோ பறவைகள்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் வெளிநாட்டு பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்து அணிவகுத்துள்ளன.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் வெளிநாட்டு பிளமிங்கோ பறவைகள் வந்து குவிந்து அணிவகுத்துள்ளன.

பிளமிங்கோ பறவைகள்

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் பூநாரை என்று சொல்லக்கூடிய பிளமிங்கோ பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருவது வழக்கம். இவ்வாறு தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வரும் பறவைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் திரும்பி செல்லும்.

இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வந்து குவியத்தொடங்கி உள்ளன. கோதண்ட ராமர் கோவிலுக்கும் ராமேசுவரத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பிளமிங்கோ பறவைகள், ரெயில் போன்று நீண்ட வரிசையில் கடலுக்குள் அணிவகுத்து நின்று இரை தேடுகின்றன.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கரையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் பிளமிங்கோ பறவைகள் நிற்பதால் கோதண்ட ராமர் கோவில் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பறவைகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது:- பிளமிங்கோ பறவைகளை பொதுவாகவே கடலோர பகுதிகளில் அதிகமாக பார்க்கலாம். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இந்த பறவைகள் அதிகமாக உள்ளன. இந்தியாவில் குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா கடல் பகுதியில் அதிகமான பிளமிங்கோ பறவைகள் காணப்படுகின்றன. இலங்கை கடல் பகுதியிலும் காணலாம். ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் பிளமிங்கோ பறவைகள் வருகின்றன. இந்த ஆண்டும் தற்போது ஏராளமான பிளமிங்கோ பறவைகள் கோதண்டராமர் கோவில் கடல் பகுதிக்கு வந்து குவிந்துள்ளன.

வருகை குறைவு

இந்த பறவைகள் உருவ அளவு 125 முதல் 145 சென்டிமீட்டர் வரை இருக்கும். நீண்ட இளஞ்சிவப்பு கால்களையும், நீண்ட கழுத்தையும் உடையவை. இந்த நீர்ப்பறவை உடல் வெள்ளையாக இருக்கும். ஆனால் இறக்கைகளை மடக்கி வைத்திருக்கும் போது, அதில் உள்ள சில சிவப்பு நிற சிறகுகள் திட்டு போன்று தெரியும். பிளமிங்கோ பறவைகள் இரைதேடும் பண்பு மிகவும் வித்தியாசமானது. தலையை குப்புற கவிழ்ந்து முழுவதும் நீருக்குள் விட்டு அல்லது அலகை மட்டும் நீரின் மேற்பரப்பில் அழுத்தி இரைதேடும். மற்ற பறவைகளுக்கு உள்ளது போல இல்லாமல் இவற்றின் மேல் அலகு வெகுவாக அசையும் பண்பை பெற்றிருக்கும். இவை அலகை நீருக்குள் விட்டு, பெரிய நாக்கினால் நீரை உறிஞ்சி பின்னர் வெளியேற்றும். கடல் நீரில் உள்ள சிறிய இறால் வகை உயிரினங்கள், புழு, பூச்சிகள், நீர் தாவரங்களின் விதைகள் உள்ளிட்டவைகளை உணவாக உட்கொள்ளும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பிளமிங்கோ பறவைகள் குறைவாகவே தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

டெலஸ்ேகாப்

இது குறித்து ராமேசுவரத்தை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் ராமச்சந்திரன் கூறும் போது, ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வரும் பிளமிங்கோ பறவைகள் நீண்ட தூரத்தில் உள்ள கடல் பகுதியில் நிற்பதால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மத்திய அரசு, சுற்றுலா நிதியாக பல கோடி ரூபாய் ஒதுக்கி வரும் நிலையில் கோதண்ட ராமர் கோவில் கடல் பகுதியில் சுற்றுலாத்துறை நிதி மூலம் உடனடியாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் டெலஸ்கோப் (தொலைநோக்கி) அமைக்கலாம். அதன்மூலம் பிளமிங்கோ பறவைகளின் அழகை பார்க்க இயலும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story