ஓடும் காரில் திடீர் தீ: 2 பேர் தப்பினர்
கோவையில் ஓடும் காரில் திடீர் தீ: 2 பேர் தப்பினர்.
கோவை
கோவை ராமநாதபுரம் சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம்.
இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே.நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஆரோக்கியராஜ் வழக்கம் போல தனது காரில் சிட்கோவில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார். அங்கு பணிகளை பார்வையிட்ட அவர் மீண்டும் மதியம் 12.15 மணியளவில் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். காரை டிரைவர் பால்ராஜ் ஓட்டினார்.
கார் சுந்தராபுரம் சிட்கோ ஆர்ச் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பால்ராஜ் காரை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த ஆரோக்கியராஜ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் வெளியில் ஓடி வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் தீப்பிடித்து எரிந்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி மட்டும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுந்தராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடித்து எரிந்த காரை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.