குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. சிறுவனின் தலையில் கல் விழுந்ததால் காயம் அடைந்தான்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. சிறுவனின் தலையில் கல் விழுந்ததால் காயம் அடைந்தான்.
தொடர் மழை
குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் ஜூலை மாதம் 15 நாட்கள் தான் இருந்தது. அதன்பிறகு மழை இல்லாமல் அருவிகள் வறண்டன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
ெவள்ளப்பெருக்கு
மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் நேற்று காலை 7 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து 8 மணிக்கு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சிறுவன் காயம்
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். அப்போது பெண்கள் பகுதியில் திருச்சியை சேர்ந்த சேர்மதுரை (வயது 12) என்ற சிறுவன் தனது தாயுடன் குளித்துக் கொண்டிருந்தான். திடீரென சிறுவனின் தலையில் சிறிய கல் விழுந்ததால் அவன் காயம் அடைந்தான். உடனே அவனை வெளியே அழைத்து வந்து விட்டனர். அதன்பிறகு அருவியில் ஓரமாக நின்று குளிக்க மட்டும் போலீசார் அனுமதித்தனர். நேற்று மாலை 5 மணிக்கு மழை தொடர்ந்து பெய்தது. இதனால் மெயின் அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை நாட்கள் என்பதாலும், இங்குள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பண்டிகை நடைபெறுவதாலும் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.